"இரட்டை இலை முடக்கப்படும் என்பது வதந்தி"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இரட்டை இலை முடக்கப்படும் என்பது வதந்தி என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உண்டு; 2026 வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்" என்றார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவு வேட்பாளரை நிறுத்தினால் கூட இரட்டை இலை முடங்காது. இரட்டை இலை முடக்கப்படும் என்பது வதந்தி. அது எந்த வகையிலும் நடக்காது; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு , நீதிமன்றம் அங்கீகரித்த நிலையில் ஏ படிவம் பி படிவத்தில் கையெழுத்திடும் உரிமை அவருக்கு மட்டும் தான் உள்ளது என்றார்.