ரூ. 500 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி சாலைகள் மறுசீரமைப்பு - அமைச்சர் கே.என்.நேரு..

 
nehru

சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகள் 500 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள இளங்கோ நகரில்,  ரோட்டரி சங்கதினருடன் இணைந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள  டயாலிசிஸ் சிகிச்சை மையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா,  துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.  நிகழ்ச்சியின்போது, மேடையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கி உள்ளதாக தெரிவித்தார்.  

Chennai Roads

மழை மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக சென்னையில்  சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.  அதேபோல வடகிழக்கு பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்த முதலமைச்சர் திட்டமிட்டடிருப்பதாகவும்,  சென்னையில் உள்ள அனைத்து மக்களுக்கும் குடிநீர் எளிதாக கிடைக்கும் வகையில் வீடுதோறும் மெட்ரோ வாட்டர் வழங்கும் திட்டம்  விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர் நேரு,  இந்த திட்டத்தை முதலமைச்சர் துவங்கி வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என்றும்,   மழைநீர் மற்றும்   தேவையான குடிநீரை சேமிக்கும் வகையில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகளை அகலப்படுத்தி,  ஆழப்படுத்தும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது என்றும்  அமைச்சர் நேரு தெரிவித்தார்.