இலங்கை மக்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி - ஓபிஎஸு-க்கு நன்றி தெரிவித்த முதல்வர்!

 
tn

இலங்கை மக்களுக்கு நிவாரணமாக தனிப்பட்ட முறையில் ரூ. 50 இலட்சம் தருவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

ops

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரிய தமிழக அரசின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்க கூடிய 137 மருந்துப்பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை தமிழக அரசு சார்பில் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இதற்காக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளது என்றும் இதற்கு ஒன்றிய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசிற்கு ஏற்கெனவே மாநில அரசு கடிதம் எழுதியிருக்கிறது. எனினும், இதுகுறித்து ஒன்றிய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவக்கூடிய வகையில், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பாஜக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியையும் ஆதரவு தெரிவித்தன. 

tn

இந்நிலையில் இலங்கை மக்களுக்கு தனிப்பட்ட முறையில் தனது  குடும்பத்தின் சார்பாக ரூபாய் 50 லட்சம் தர தயார் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.  மனிதநேயத்திற்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை இத்தீர்மானம் விளக்குகிறது என்றும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.  இலங்கை மக்களுக்கு உதவ ரூபாய் 50 லட்சம் வழங்க முன்வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்தார். "இலங்கை தமிழர்களுக்கு நிவாரணமாக 50 லட்சம் தருவதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் அறிவித்ததற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.  ஓபிஎஸ் நிதி தருவதாக அறிவித்தது மற்றவர்களும் அவரை போல கொடுக்க வேண்டும் என்பதற்காக தான்"  என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறினார்.