பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த நடத்துநர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு

 
CM

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பணியிலிருக்கும் போது பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த, அரசுப் பேருந்து நடத்துநர் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடத்துனரின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்று (14-5-2022) அதிகாலை 3.15 மணியளவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்து சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது, மதுராந்தகத்தில் குடிபோதையில் பேருந்தில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் நடத்துநர்       திரு. தி.பெருமாள் பிள்ளை, பயணச்சீட்டு எடுக்க வலியுறுத்திய போது, அந்தப் பயணி நடத்துநரைத் தாக்கியுள்ளார். இதன் காரணமாக, நடத்துநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக அவர் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

bus

இந்தத் துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் திரு. தி.பெருமாள் பிள்ளை அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு உடனடியாக பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.