யூடியூபர் வீட்டில் கொள்ளை முயற்சி! Home tour வீடியோ போட்டதால் விபரீதம்

 
cctv

கோவையில் யூடியூபர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்த திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுஹைல் (29). இவர் சுஹைல் விலாகர் மற்றும் சைபர் தமிழா என்ற யுடியூப் சேனலை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாபினா (28), இவர்களுக்கு ஏழு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் சுஹைல் கோவை கே.ஜி சாவடி பிச்சனூர் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு கட்டி குடிவந்துள்ளார். மேலும் இவரது வீட்டில் நடக்கும் அன்றாட குடும்ப செயல்கள், சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகள் தொடர்பாக வீடியோவை பதிவு செய்து அதனை தனது யூடியூப்  பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். மேலும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் சொந்த வீடு, இரண்டு கார்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களையும் வாங்கி வசதியுடன் வாழ்ந்து வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  சனிக்கிழமை காலை 6 மணிக்கு சுஹைலின் வீட்டுக் கதவை தட்டி உள்ளே சென்ற மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை சுஹைலின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் கேட்டுள்ளார்.  அப்போது சுதாரித்துக் கொண்ட சுஹைல், அந்த மர்ம நபரை மடக்கினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை அதே பகுதியில் பிடித்து வைத்துள்ளார்.  பின்னர் காவல்துறை அவசர எண்ணான 100க்கு அழைத்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த கே.ஜி சாவடி போலீசார் அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  

விசாரணையில் பிடிபட்ட நபர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அனுராமன் (25), என்பதும் அங்கு ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது,  சுஹைல் குறுகிய காலத்தில் யூடியூப் மூலம் அதிக பணம் சம்பாதித்துள்ளதாகவும்,  அதனை மிக எளிதாக நாம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதுச்சேரியில் இருந்து அனுராமன் கோவைக்கு வந்ததும் தெரியவந்தது. மேலும் நள்ளிரவு 1.30 மணியளவில் சுஹைலின் வீட்டை அடைந்த அனுராமன் அவரது வீட்டின் மொட்டை மாடியிலேயே இரவு முழுவதும் தூங்கியுள்ளார். 

பின்னர் காலை 6 மணிக்கு எழுந்து கட்டியை காட்டி மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அனுராமனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.