அதிமுக தலைமை அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்

 
admk

அதிமுக தலைமை அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து வருகிற 25-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் நேராகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி விளக்கம் அளிக்க வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

What's next for AIADMK after failure of EPS-OPS arrangement? | Deccan Herald

இதுதொடர்பாக வருவாய்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ( 11.07.2022 ) காலை சுமார் 8.30 மணியளவில் E - 2 இராயப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஒரு பிரிவினர் சென்ற போது . அங்கிருந்த மற்றொரு பிரிவினர் கட்சி தலைமை அலுவலகத்தில் நுழையவிடாமல் தடுத்துள்ளனர் . இதனால் இருதரப்பினரும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு , கற்களையும் எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர் . மேலும் அவர்கள் காவல்துறையினரை பணி செய்யாவிடாமல் தடுத்ததுடன் . அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மற்றும் கார்களை சேதப்படுத்தினர் . 

இது தொடர்பாக , பாசறை பாலசந்திரன் என்பவர் 13 நபர்களுடன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த போது போலீசார் அவர்களை கைது செய்து காவல்துறையினர் அவ்விடத்தில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் . மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் 24 நபர்களும் , மற்றொரு தரப்பில் 20 நபர்களும் காயமடைந்தனர் . மேலும் காவல் துறையைச்சேர்ந்த 2 நபர்களும் , மற்றும் ஒரு தனி நபர் என மொத்தம் 47 நபர்கள் காயமடைந்தனர் , காயமடைந்த நபர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை , இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை . கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காவேரி மருத்துவனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது குறித்து E - 2 இராயப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் , ச / பி 147 , 148 , 341 , 324 , 353 , 336 - ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது . 

சிகிச்சைக்காக E - 2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் தொடர்புடைய 14 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருதரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு இது தொடர்பாக உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் . கட்சி அலுவலத்தின் உரிமையை கோருவது தொடர்பாக இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால் பொது அமைதி பாதிக்கப்பட்டதால் , E - 2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க . தென்சென்னை வருவாய் கோட்ட அலுவலர் அவர்களிடம் அறிக்கை அளித்தார் . அதன்பேரில் , வருவாய் கோட்ட அலுவலர் ( தெற்கு / உட்கோட்ட நடுவர் , தென் சென்னை ) என்பவர் , முதல் தகவல் அறிக்கை / மற்ற ஆவணங்களை ஆராய்ந்து , சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார் . மேலும் , உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில் இப்பிரச்சனை தீவிர சட்டம் & ஒழுங்கு பாதிப்பையும் , பொது அமைதியையும் சீர்குலைத்துவிடும் என்று கருதியதன் அடிப்படையில் இன்று ( 11.07.2022 ) கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய , வருகின்ற 25.07.2022 அன்று இரு தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜர் ஆக வேண்டும் எனக் கூறி ச / பி 145 - ன் படி இருதரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கினார் . இதைதொடர்ந்து வருவாய் கோட்ட அலுவலர் அவர்கள் ச / பி 146 ( 1 )  ன்படி பொது அமைதியை காக்கும் பொருட்டு பிரச்சனைக்குரிய கட்டிடத்தை E - 2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பூட்டி சீல் வைத்து போதுமான பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார் . மேலும் , இருதரப்பினரையும் உரிய உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தேவையான உத்தரவுகளை பெறுமாறும் , மேற்படி சொத்திற்கு பொறுப்பாளராக மயிலாப்பூர் வட்டாட்சியர் அவர்களை நியமித்து , வருவாய் கோட்ட அலுவலரின் உத்தரவின்படி செயல்படப் பணித்துள்ளார் . மேற்படி பிரச்சனைக்குரிய அலுவலகத்தில் இன்று நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து , சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட கட்சி அலுவலகம் மற்றும் இது தரப்பைச்சேர்ந்த தலைவர்கள் வீடுகளுக்கு தக்க காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.