பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் காலமானார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் நடிகருமான ஜூடோ ரத்தினம் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.

ஜூடோ ரத்தினம் 1966ம் ஆண்டு நடிகர் ஜெய்சங்கர் நடித்த ‘வல்லவன் ஒருவன்‘ திரைப்படத்தின் மூலம் சண்டை பயிற்சி மாஸ்டராக அறிமுகமானவர். இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,500 க்கும் மேற்பட்ட படங்களிலும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் ஆகியோருக்கும் சிவாஜி ரஜினி கமல் அர்ஜுன் விஜய் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
ஏராளமான திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சி அமைத்ததால் உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் 2013 ஆம் ஆண்டு இடம் பெற்றுள்ளார்.. மேலும் இவர் கலைமாமணி மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு 2013-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி உள்ளது.
இவரின் உடல் குடியாத்தம் பகுதியில் இருந்து இன்று இரவு சென்னை வட பழனிக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஸ்டன்ட் யூனியன் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சனிக்கிழமை மீண்டும் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்து குடியாத்தம் பகுதியில் உள்ள இடுகாட்டில் மாலை 3 மணி அளவில் அவருடைய உடல் தகனம் செய்யப்படுகிறது.


