வடகிழக்கு பருவமழையின்போது உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் - தமிழக அரசு

 
assembly

வடகிழக்கு பருவமழையின்போது உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் 2 மனித உயிரிழப்புகளும், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மனித உயிரிழப்பும் என மொத்தம் 3 மனித உயிரிழப்புகள் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகி உள்ள நிலையில், இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 25 கால்நடை இறப்புகள் பதிவாகி உள்ளது. 140 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. கடந்த 4-ந் தேதி (நேற்று முன்தினம்) முடிய பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 64 மரங்கள் அகற்றப்பட்டு உள்ளன. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 763 நீர் இறைக்கும் மோட்டார்கள் தயாராக உள்ளன.

மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் 250 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வருகிற 9-ந் தேதி இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும், இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படை ஆயிரத்து 149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.