மேட்டூர் அணையிலிருந்து 1.20 லட்சம் கன அடி நீர் திறப்பு- கரையோர வாசிகளுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, அந்த இரு அணைகளில் இருந்தும் இன்று 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மேலும் கடந்த மூன்று நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையான ஒகேனக்கல்லுக்கு இன்று மாலை ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் இன்று காலை முதலே படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு 51 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் , பிற்பகலில் அது 60 ஆயிரம் கன அடி , 75 ஆயிரம் கன அடி , 85ஆயிரம் கன அடி என மணிக்கு மணி உயர்ந்து மாலை 6 மணி அளவில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கன அடியாக நீர்வரத்து வந்தது . பின்னர் இரவு 8.30 மணி அளவில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து வந்தது. இந்நிலையில் மேட்டூர் அணை ஏற்கனவே கடந்த 16ஆம் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி, மேட்டூர் அணைக்கு வரக்கூடிய தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு 8.30 மணி அளவில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. அணையின் நீர் மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 97 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் பதினேழாம் தேதி மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர் வரத்தாக வந்தது.
அணையில் இருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அடுத்த நாள் 18 ந் தேதி முதல் நீர் வரத்து படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் 15 நாட்களுக்கு பிறகு கனமழை காரணமாக இன்று மீண்டும் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டுள்ளது. அதேபோல் அணையிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து என்பது அதிகபட்சமாக 2 லட்சம் கன அடியாக வந்தது, அதேபோல் மேட்டூர் அணையில் இருந்து அப்போது 2 லட்சம் கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.
கடந்த 1961 ஆம் ஆண்டு மூன்றரை லட்சம் கன அடி தண்ணீர் அதிகபட்சமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்தாக வந்தது. அப்போது மூன்றரை லட்சம் கன அடி தண்ணீரும் காவிரியில் வெளியேற்றப்பட்டதால் , ஒரு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.