இராமசாமி படையாச்சியார் 105-வது பிறந்தநாள் - ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு!!

 
op

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சாதி மதங்களை கடந்து ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை அமைக்க பாடுபட்டவருமான  எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியார் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

op

இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்றெல்லாம் 
 தொழுதுண்டு பின்செல் பவர்"

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, மதிப்புமிக்க உழவர் குடும்பத்தைச் சேர்ந்தவரும்; பின்தங்கிய மக்களின் நலனில் தன்னுடைய நாட்டத்தைச் செலுத்தி அவர்கள் சமுதாயத்தில் மதிப்புமிக்க அங்கத்தினைச் சேர்ந்தவர்களாக ஆக வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டியவரும்; தன்னுடைய களங்கமற்ற பொது வாழ்க்கையாலும், அரசியல் சாதூரியத் தன்மையாலும், பேச்சு வன்மையாலும் அனைத்துத் தரப்பினரும் தன்னை மதிக்கும்படி வாழ்ந்து சகாப்தம் படைத்தவரும்; 1952 முதல் 1962 வரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டப் பேரவை உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றி,தமிழக அரசியலில் தன்னுடைய ஆழமான முத்திரையைப் பதித்தவரும் 1954 முதல் 1957 வரை உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணிபுரிந்து பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவரும் இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவரும் கடலூர் நகராட்சி மன்றத்தின் தலைவராகவும், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவராகவும், பல்வேறு சமூகப் பொது நல நடவடிக்கைகளில் பங்கு கொண்டு நாட்டிற்காக உழைத்தவருமான திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது.

tn

சாதி, சமயம் போன்றவற்றைக் கடந்து நாணயமான அரசியல் வாழ்க்கை நடத்திய நல்லவர்களை என்றென்றும் போற்றி வணங்குகின்ற பெருந்தன்மை உடைய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம். இதன் அடிப்படையில், வாழ்வாங்கு வாழ்ந்த சமுதாயத்தினை தலைநிமிரச் செய்தவரும், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை நிர்மாணிப்பதில் முக்கியப் பங்கு வகித்தவருமான திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களை கௌரவிக்கும் வகையில், விழுப்புரத்தை தலைநகரமாக கொண்ட மாவட்டத்திற்கு 'விழுப்புரம் இராமசாமி படையாச்சியார் மாவட்டம்' என்று பெயர் சூட்டியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இது மட்டுமல்லாமல், திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் திருவுருவப் படத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் திறந்து வைத்தது, அவரது பிறந்த நாளினை அரசு விழாவாக அறிவித்தது, அவருக்கு கடலூரில் மணிமண்டபம் அமைத்துக் கொடுத்தது ஆகிய பெருமைகளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.

tn

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சாதி மதங்களை கடந்து ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை அமைக்க பாடுபட்டவருமான திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் 105-வது பிறந்த நாளான 16-09-2022 - வெள்ளிக்கிழமை காலை 10-00 மணியளவில் சென்னை , கிண்டியில் உள்ள திரு. எஸ். எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். மேற்படி நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்"என்று குறிப்பிட்டுள்ளார்.