தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

 
Ramadass

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் தலைவர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிக்கு தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் தலைவர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிக்கு தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்தத் தேர்தல் நியாயமாக நடைபெறுமா? என்பது குறித்து மருத்துவர்களிடையே பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவர்கள் எழுப்பிவரும் ஐயங்கள் சரியானவை என்று நம்புவதற்கு தேவையான காரணங்கள் இருப்பதை மறுக்க முடியாது.  தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் வெளியிட்டு உள்ளது. அதில் 92,198 மருத்துவர்கள் மட்டும் தான் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை 1.60 லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது. அவர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களில் சுமார் 70 ஆயிரம் பேரை தவிர்த்து விட்டு மீதமுள்ளவர்களை மட்டும் வைத்துக் கொண்டு தேர்தல் நடத்துவது நேர்மையானதாகவோ, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பதாகவோ அமையாது என்பது தான் மருத்துவர்களின் புகார் ஆகும். 

ramadoss

அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், அதிகம் படித்தவர்களான மருத்துவர்களை அஞ்சல் முறையில் மட்டும் தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயமல்ல. மருத்துவக் கவுன்சில் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்களை ஆன்லைன் மூலம் செய்ய அனுமதிக்கும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், அதற்கான தேர்தலையும் ஆன்லைன் முறையில் நடத்த முடியும். அதை செய்ய மருத்துவக் கவுன்சில் முன்வராதது ஏன்? தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் மிகுந்த அதிகாரம் பெற்ற அமைப்பாகும். அந்த அமைப்பின் நிர்வாகிகள் மிகவும் நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமித்து, ஆன்லைன் முறையில் வாக்களிக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.