ராஜீவ்காந்தி கொலை- ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுதலை

 
 Rajiv Gandhi Murder Case Acquest release

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய இருவர் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் திருச்சி இலங்கை தமிழர்கள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் சிறையில் இருந்த நிலையில், கடந்த மே மாதம் 18-ஆம் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி காட்டி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தங்களையும் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனைதொடர்ந்து சென்னை புழல் மத்திய சிறையில் இருந்த ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய இருவர் விடுவிக்கப்பட்டனர். 

பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் புழல் சிறைக்கு வந்து இருவரையும் வரவேற்றனர். அப்போது உடன் வந்தவர்கள் அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டனர். இலங்கை தமிழர்கள் என்பதால் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் திருச்சி இலங்கை தமிழர்கள் முகாமிற்கு அழைத்து சென்றனர். சிறை வாயிலில் வாகனம் கடந்து செல்லும் போது பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.