சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

 
rain


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளது. 

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  இதேபோல் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழத்தின் ஒருசில மாவட்டங்களிலும் அவ்வபோது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain

 

இதேபோல் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை  வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.