எடப்பாடி பழனிசாமியுடன் ராகுல் காந்தி ரகசிய பேச்சு? அதிர்ச்சியில் பாஜக

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் ஆன எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் 15வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற முயற்சித்து வரும் நிலையில், பாஜக அல்லாத மாநிலங்களின் ஆதரவை பெற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் ஆன எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க வேட்பாளரை தி.மு.க., ஆதரித்தால் அ.தி.மு.க., பக்கம் செல்ல, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ராகுல் காந்தி எடப்பாடி பழனிசாமியுடன் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளருக்கு, ராகுல் ஆதரவு கோரியதாகவும், பா.ஜ.,வை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், இது தொடர்பாக இரு தரப்பிலும், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கோரியது குறிப்பிடதக்கது.