தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த அனுமதி

 
rss class

தமிழகத்தில் 50க்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுதந்திர தின 75 ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி, உள்துறை மற்றும் டி.ஜி.பி.,க்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்காததால், அனுமதி அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவில், மற்ற மாநிலங்களில், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தவே போலீசுக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க அதிகாரம் இல்லை என கூறப்பட்டது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எந்தப் பாதையில் செல்கிறார்கள், ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது, காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்தப் பொருட்களும் பயன்படுத்தப்படாது போன்றவை தொடர்பான உறுதியை அளித்தால், அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28-ம் தேதிக்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும், நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்தார்.