அதிமுக எங்கள் பங்காளி...விரைவில் இபிஎஸ் திமுகவிற்கு வருவார் - ஆர்.எஸ்.பாரதி பேச்சு

 
rs bharathi

பெரும்பாலான அ.தி.மு.க.வினர் தி.மு.க.விற்கு வந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் எடப்பாடி பழனிசாமியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனவும் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். 

திருப்பூரில், வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்ற பொய் பரப்புரையை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகின்றனர். மேலும் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய சுந்தர் பிச்சை தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்வி கற்று ஆங்கிலம் தெரிந்ததால் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பா.ஜ.க.வினரை போல பேசி வருகிறார். ஆளுநரை திரும்ப பெறக்கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கி இருக்கிறோம். குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். 

ep

அதிமுகவை குறைக்கூற போவதில்லை. ஏனென்றால் பெரும்பாலான அ.தி.மு.க.வினர் தி.மு.க.விற்கு வந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் எடப்பாடி பழனிசாமியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் பதவி கொடுத்தவர்களையே காட்டிக்கொடுத்த அவரை தி.மு.க. சேர்த்து கொள்ளாது. அ.தி.மு.க. எப்போது இருந்தாலும் தி.மு.க.விற்கு பங்காளிதான், ஆனால் பா.ஜ.க. தி.மு.க.விற்கு மட்டுமல்ல நம் இனத்திற்கே பகையாளி. இவ்வாறு ஆர்.எஸ். பாரதி பேசினார்.