தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவி - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!!

 
K balakrishnan

ஆளுநர் பதவியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாகவும், ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவும் ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றே அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியுள்ளது கடும் கண்டனத்துக்குரியதாகும். காசி - தமிழ் சங்கமம் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட குயுக்தியான ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் இறுதியாக ஆளுநர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் இதை பேசியுள்ளார். அதே பேச்சில் தமிழ் நாட்டின் தனித்தன்மை குறித்த எரிச்சலையும் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு உள்ளிட்டு மொழிவழி தேசிய உரிமையை மறுதலித்து, ஒற்றை இந்தியாவை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ் திட்டம் எடுபடவில்லையே என்ற ஆத்திரமே அவர் பேச்சின் அடிநாதமாகும். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

rn ravi

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பாதகமில்லாமல் அதன் செயல்பாட்டை வலுப்படுத்துவதைத்தான் ஆளுநர் செய்ய வேண்டும். ஆனால் அந்த வேலையைக் கூட தாமதப்படுத்தி 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி புதிய கல்விக் கொள்கையை திணிக்க முயல்கிறார். பல்கலைக்கழகங்களில் மூக்கை நுழைக்கிறார். ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு எதிரான அவசர சட்டத்தை காலாவதி ஆக்கச் செய்து 'ரம்மி ரவி' என்ற இழிபுகழை சம்பாதித்துள்ளார். இவைதான் இந்த ஆளுநரின் சாதனைகள்,இதே ஆளுநர், கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் அரசியல் செய்ய முயற்சித்து கண்டிக்கப்பட்டார். தமிழ்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து, பாஜக தலைவராகவே நடக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் விருப்பத்தை பேசி கண்டனங்களை பெறுகிறார். இந்திய விடுதலைக்கும், தமிழ் நாட்டின் உருவாக்கத்திற்கும் ஏராளமான உயிர்த் தியாகங்களை செய்துள்ளது தமிழ்நாட்டு மண். ஆனால், அதிலெல்லாம் எந்த பங்கும் இல்லாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். விடுதலை போராளிகளை காட்டிக் கொடுத்ததுடன், மொழிவழி மாநிலம் என்ற ஏற்பாட்டையும், பல்வேறு கலாச்சாரங்களின் இருப்பையும் எதிர்த்து செயல்பட்ட இழிவான வரலாற்றிற்கு சொந்தக்காரர்களே சங்க பரிவாரத்தினர்.

இந்திய விடுதலைக்கு பிறகும், 1957 ஆம் ஆண்டு ஜன சங்கத்தின் தேர்தல் அறிக்கை, 'கூட்டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு என்று பிரகடனப் படுத்துவோம்' என்று அறிவித்தது வெள்ளிடைமலை. அதையே கொல்லைப்புறம் வழியாக திணிக்க இப்போது அப்பட்டமாக முயற்சிக்கிறார் ஆளுநர்,சட்டமன்றம் மற்றும் அரசின் நிர்வாக மொழிகள் அனைத்தும் தாய்மொழியில் நடக்க வேண்டுமெனவும், மொழிவழி மாநிலங்கள் அமைக்க வேண்டுமெனவும் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக முதலில் ஆந்திர மாநிலமும், தமிழ்நாடு அமைவதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான போராட்டங்களும், நூற்றுக்கணக்கான உயிர்த் தியாகங்களை தொடர்ந்தே 1956 நவம்பர் 1-ல் இந்தியா, 14 மாநிலங்களாகவும் 6 ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டது.

K balakrishnan
நாடாளுமன்றத்தில் 1961 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்ற மசோதாவை தோழர் பி.ராமமூர்த்தி கொண்டுவந்தார். அவர் சிறையில் இருந்த சூழலில், இந்த மசோதாவை முன்வைத்து வாதாடினார் மேற்கு வங்கத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் உறுப்பினர் பூபேஷ் குப்தா. அண்ணாவும் அதனை ஆதரித்தார். ஆனால் மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறு எழுச்சியுற்ற தமிழ் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கினர். அண்ணாவின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது. அதற்கு பிறகு, முத்தாய்ப்பாக நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு" பெயர் சூட்டப்பட்டது. அந்த தீர்மானம் ஒன்றிய அரசின் ஒப்புதலை பெற்று அமலானது. இப்படிப்பட்ட வரலாற்றைத்தான் துச்சமென பேசியுள்ளார் ஆளுநர்.

அனைத்து மொழிகளுக்கும் சமமான முன்னுரிமை, தாய்மொழிகளுக்கு ஊக்கம், தாய் மொழியில் நிர்வாகம், அனைத்து மக்களுக்கும் அதிகாரம் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாகும். ஆளுநர் பதவியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாகவும், ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவும் ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்தப் போக்கை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.