ஆளுநர் மாளிகையே ‘தமிழ்நாடு’ போல காட்சியளிக்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி

 
rnravi

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் பொங்கல் வைத்தார். இந்த விழாவை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் புறக்கணித்தனர். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் பொங்கல் பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி , வேலுமணி மற்றும் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே போல், ஒ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரோடு பங்கேற்றார். பாஜக சார்பில், சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற நீதிபதிகள், தூதரக அதிகாரிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பத்ம பூஷன் பத்ம விபூசண் விருது பெற்றவர்கள், விவசாயிகள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

ஆளுநர் மாளிகை வளாகத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை மற்றும் தலைப்பாகை அணிந்த படி, பாரம்பரிய வாத்தியங்கள் முழுங்க ஊர்வலமாக வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லஷ்மி ரவி, பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். அதை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து துறை பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு ஆளுநர் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான நாதஸ்வர இசை நிகழ்ச்சி, தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் பொய்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பொங்கல் அழைப்பதிழில் தமிழ்நாடு அரசு இலட்சிணை புறக்கணித்ததால், ஆளுநரின் பொங்கல் விழாவை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் புறக்கணித்தனர். 

Image

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பொங்கல் பண்டிகையானது தமிழர்களின் பெருமையான மற்றும் பழமையான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையானது நம்முடைய பாரம்பரியத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தக்கூடிய பண்டிகை. இதனால் தான் நாம் ஜல்லிக்கட்டு விளையாடி வருகிறோம். இன்று நடைபெற்ற கலாச்சார விழாக்களால் ஆளுநர் மாளிகை ஒரு சிறிய தமிழ்நாடு போல காட்சியளித்தது” எனக் கூறினார்.