"தரமான, சரியான எடையில் ஆவின் பாலை விற்க வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம்

 
ops

தரமான மற்றும் சரியான ஆவின் பால் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதில், தனிக்கவனம் செலுத்தி "ஆவின் பொருட்களின் மீதான GST-யை தடுக்கவும்" GST விதிப்பிற்கு மேல் விலை உயர்த்தப்படுவதை ரத்து செய்யவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களாகவே ஆவின் பால் அளவு குறைவாக இருக்கின்றது என்று மக்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், அதனை நிரூபிக்கும் விதமாக அரை லிட்டர் பாலுக்குப் பதிலாக 430 கிராம் மட்டுமே இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது 500 மி.லி. பால் பாக்கெட்டின் அளவை கிராமில் கணக்கிடும்போது 517 கிராம் இருக்க வேண்டுமென்றும், பால் பாக்கெட் இரண்டு கிராம் இருக்க வேண்டும் என்றும், எந்தவிதத்தில் பார்த்தாலும் % லிட்டர் பாலின் எடை 515 கிராம் இருக்க வேண்டுமென்றும், ஆனால் விற்பனைக்கு வந்த % லிட்டர் பால் பாக்கெட்டின் எடை 430 கிராம் மட்டுமே இருந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. இது கடும் கண்டனத்திற்கு உரியது.

yn

இதன்மூலம் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு ஈடு செய்யப்படுவதோடு, முக்கியப் புள்ளிகளுக்கு வருவாய் கிடைக்கவும் வழி செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதுபோன்ற செயல்கள் மூலம் விலை குறைப்புக்கு முன்பு உள்ள வருவாயை விட விலைக் குறைப்பிற்கு பின்பு கூடுதலாக வருவாய் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.இந்தச் சூழ்நிலையில், பாலின் அளவை உறுதி செய்ய வேண்டிய ஆவின் நிர்வாகம், இனி இதுபோன்ற குறைபாடுகள் இருக்காது என்று உறுதி செய்ய வேண்டிய ஆவின் நிர்வாகம், அளவு குறைவாக இருந்தால் மாற்றுப் பால் பாக்கெட் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது நிர்வாகத் திறமையின்மைக்கு, உறுதியற்ற தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் எடைக் குறைப்பை தடுப்பதற்காக அரசு சார்பில் சட்டமுறை எடையளவுக் கட்டுப்பாடு அதிகாரியும், அவருக்குக் கீழ் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களும் பணிபுரிந்து கொண்டிருக்கின்ற நிலையில், அரசு நிறுவனமே இதுபோன்ற எடைகுறைப்புச் செயல்களில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. ஒரு பக்கம் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு மறுபக்கம் அதனைப் பிடுங்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

op

இதேபோன்று, அண்மையில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குழுக் கூட்டத்தில், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களுக்கு ஐந்து விழுக்காடு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு எடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஆவின் பொருட்களான மோர், தயிர், லஸ்ஸி ஆகியவற்றின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியது. இதன்படி, 10 ரூபாயாக இருந்த 100 மி.லி. கப் தயிர் 12 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பத்து ரூபாய் மீது 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டால், அதன் விலை 10 ரூபாய் 50 காசாகத்தான் உயரும். 12 விழுக்காடு வரி விதிக்கப்பட்டாலும் அதன் விலை 11 ரூபாய் 20 காசாகத்தான் உயரும். ஆனால் 12 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதேபோல் 30 ரூபாய் என்றிருந்த % லிட்டர் தயிர் 35 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஐந்து விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருந்தால், அதன் விலை 31 ரூபாய் 50 காசாகவும், 12 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருந்தால் அதன் விலை 33 ரூபாய் 60 காசாகவும் உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 35 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வில் கூட ஒரு வெளிப்படையற்ற தன்மை பின்பற்றப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கும் மேலாக ஆவின் பொருட்களின் விலையை அரசு உயர்த்தியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எத்தனை சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது என்பதில் கூட ஒரு தெளிவற்ற நிலைமை காணப்படுகிறது. இதுவும் மக்களை ஏமாற்றும் ஒரு செயல்.

gn

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தனிக் கவனம் செலுத்தி, குறைவான எடையில் பால் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், ஏழை மக்கள் வாங்கும் ஆவின் பொருட்களின்மீது ஜி.எஸ்.டி. விதிப்பதை தடுத்து நிறுத்தவும், ஜி.எஸ்.டி. விதிப்பிற்கு மேல் ஆவின் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டதை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.