மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு வழங்கும் நிதியை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்- சபாநாயகர் செல்வம்

 
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை வரும் பிப்ரவரி 3ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது என்றும், சட்ட விதிகளுக்கு  உட்பட்டு குளிர்கால கூட்டமாக சபை கூட்டப்படுகிறது என்று சபாநாயகர் செல்வம் பேட்டி அளித்தார். 

puducherry


புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி சட்டப்பேரவை வரும் பிப்ரவரி 3ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் என முடிவு செய்யும். சட்ட விதிகளுக்கு  உட்பட்டு குளிர்கால கூட்டமாக சபை கூட்டப்படுகிறது. வரும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் இம்முறை தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். புதுவையில் பணியாற்றும் 90 சதவீத அதிகாரிகள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். ஒரு சில அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. அவர்கள் மீது வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வர் அனுமதியுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி அளிக்கிறது. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல், அதிகாரிகள் திருப்பி அனுப்பி விடுகின்றனர். ஜல்சக்தி திட்டத்தில் மத்திய அரசு ரூ.33 கோடி நிதி புதுவைக்கு ஒதுக்கியது. இதில் ரூ.ஒரு கோடியை மட்டும் செலவு செய்து மீதியை திருப்பி அனுப்பியுள்ளனர். இதேபோல ஊரக வளர்ச்சி முகமையில் பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் தார்சாலைகள் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. புதுவையில் இதற்கான பணிகள் நடைபெறாமல் இருந்தது. இதுதொடர்பாக ஒரு ஐஏஎஸ் அதிகாரியை மாற்றிய பிறகு தற்போது ரூ.48 கோடியில் 125 கிமீ தார்சாலைகள் அமைக்கப்படுகிறது. புதுவையில் 108 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. ஆனால் 10 கிராம பஞ்சாயத்து இருப்பதுபோல மத்திய அரசுக்கு அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ளனர். 

இந்த கிராமங்களுக்கு மட்டும்தான் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இவற்றையெல்லாம் திருத்தியமைத்து வருகிறோம். நிதியை செலவிடாமல் இருந்தற்கு எல்லாம் தலைமை செயலர்தான் பொறுப்பேற்க வேண்டும். அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதால் அதன் எண்ணிக்கையை குறைக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார். மாநிலஅந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தி அரசு தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பதுதான் பேரவைத்தலைவரின் கடமை” என்றார்.