10 ஆயிரம் அரசுப் பணியிடங்களும் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு..

 
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில்  அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களும் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என  அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.
புதுச்சேரி         
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில், அம்மாநில காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில  முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு  காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.  அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டுதான் காவலர்கள் நியமிக்கப்பட்டடதாகவும்,. அதன்பிறகு தற்போதுதான் காவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  இந்த நியமனத்தில் வயது வரம்பு கடந்ததால், பலருக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தாலும்  காவலர் தேர்வு நியாயமான முறையில் நடந்துள்ளதாகவும் கூறினார்.

புதுச்சேரி காவலர்கள்

 மேலும் காவல்துறையில் காலியாக உள்ள 1,500 பணியிடங்கள் விரைவாக நிரப்படும் என்று கூறிய  முதலமைச்சர், காவல்துறைக்கு தான் தீய சக்திகளை அடக்கும் சக்தி இருப்பதாகவும்  தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், காக்கி சட்டை அணிந்தவுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் கூறினார்.  இளநிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும்,   125 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட ரங்கசாமி,  அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களும் அறிவித்தப்படி தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என உறுதியளித்தார்.