பொங்கலை முன்னிட்டு, 3.94 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!

 
BUS

பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் , இன்று அதிகாலை முதலே  பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 

bus

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்வது வழக்கம்.  இதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த 12ஆம் தேதி முதல்  14ஆம் தேதி வரையிலும்,  பயணிகள் மீண்டும் ஊர் திரும்ப வருகிற 18-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதன் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல மூன்று நாட்களுக்கு 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  கோயம்பேடு, கேகே நகர், மாதவரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த 6 பேருந்து நிறுத்தங்களுக்கு செல்ல 340 இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில்  பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளில் இதுவரை 3.94 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.  சென்னையிலிருந்து தினமும் இயங்கும் 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 2010 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

omni bus

இந்த சூழலில் பொங்கலுக்கு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல இரண்டாவது நாளாக கூடுதலாக 1855 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் , சிரமமின்றி மக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.  ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து புகார்கள் எதுவும் வரவில்லை என அமைச்சர் சிவசங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.