தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்..

 
anbil-mahesh-3

தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார்.  

 ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள  பள்ளியில் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு பேசிய  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், “ராணிப்பேட்டை மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனை எவ்வாறு முன்னோக்கி செல்வது என்பது குறித்தும், மாணவ, மாணவிகளின் தேர்ச்சியை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கு முன்பு 5 நாள் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யும் திட்டம் முதல் அமைச்சரிடம் ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கப்பட உள்ளது.

குழப்பத்தில் மாணவர்கள்

இதன் மூலம் ஒருசில காரணங்களுக்காக மாணவ-மாணவிகள் தவறான முடிவுகளை எடுப்பது குறையும். மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வகுப்பில் பெறுகின்ற மதிப்பெண் மட்டுமே மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்காது. மாணவ-மாணவிகள் கவனத்தை ஒழுங்குப்படுத்தி படிப்பில் முழு கவனத்தினை செலுத்துவதற்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வித்துறையில் பழைய நடைமுறையை மாற்றி புதிய நடைமுறைகளை கொண்டு வந்திருக்கின்றோம். அரசு பள்ளி, தனியார் பள்ளி என அனைத்தும் சேர்ந்து 1 கோடியே 30 லட்சம் மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்.அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமையாக உள்ளது.

தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்..

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அடுத்த குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதனைப் பெற்றோர்கள் உணரவேண்டும். நான் முதல்வன் திட்டமும் இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலைநிறுத்த மாணவ-மாணவிகளுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக்கூடாது. மாணவர்களை, ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் போல் அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து அரசு உத்தரவினை மீறி பள்ளிகளை திறக்காமல் இருந்த 981 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறினார்..