அமைச்சருக்கு மின்தடை வந்தால் சஸ்பெண்ட்... மக்களுக்கு வந்தால்? - பிரேமலதா காட்டம்

 
premalatha vijayakanth

அமைச்சர் துரைமுருகன் பேசியபோது மின் தடை ஏற்பட்டதற்காக இரண்டு பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்த அரசு, மக்கள் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படுவதை ஏன் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். 

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, தேமுதிகவின் 18ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, மாணவிகள் மற்றும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து விழா மேடையில் சிறப்புரையாற்றிய பிரேமலதா கூறியதாவது:
ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கவே விஜயகாந்த், இந்த இயக்கத்தை நடத்தி வருகிறார். விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். பேசுவதிலும், நடப்பதிலும்தான் கொஞ்சம் தொய்வு. மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் சந்திக்க வருவார். இன்றைக்கு தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஒரு பக்கம், மற்றொரு பக்கம் மின்வெட்டு பிரச்சினை உள்ளது. 

premalatha

தொடர்ந்து பேசிய அவர், காட்பாடியில் துரைமுருகன் பங்கேற்ற விழாவில் 3 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவர் பாதியிலேயே புறப்பட்டுவிட்டார். அதன் பிறகு 2 என்ஜினீயர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். உங்களுக்கு மின்தடை வந்தால் சஸ்பெண்டு, கோடிக்கணக்கான மக்கள், மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள், எத்தனை பேரை சஸ்பெண்டு செய்யப்போகிறீர்கள். தமிழகம் பல லட்சம் கோடி கடனில் உள்ளது. ஒவ்வொரு மனிதர்கள் மீதும் 900 ரூபாய் கடன் உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.தான் இங்கு நடந்த மொத்த ஊழலுக்கும் காரணம். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.