"ஆவினில் ஹலால் நடைமுறை.!" ஆவினை இந்துக்கள் புறக்கணிக்கவா?

 
avin

ஆவினில் ஹலால் நடைமுறை, வதந்திகளை பரப்பும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ஆவின் நிர்வாகம்

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் ஆவின் சமையல் வெண்ணெய் ஹலால் செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துடன் விற்பனை செய்யப்படுவதும், அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அடையாளத்துடன் எப்படி விற்பனை செய்யலாம் எனவும், அதற்கு திமுக அரசு தான் காரணம்  அதனால் ஆவின் பால் பொருட்களை வாங்காமல் இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்கிற ரீதியில் ஒரு புகைப்படம் சமூக விரோதிகளால்  தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. (தவறான விசயங்களை எவர் செய்தாலும் அவர்கள் சமூக விரோதிகள் தான்.) 

தமிழக அரசின் "ஆவின்" நிறுவனம் மட்டுமின்றி பாஜக ஆளுகின்ற குஜராத் மாநிலத்தை சேர்ந்த "அமுல்", சாமியார் பாபா ராம்தேவ் "பதஞ்சலி" உள்ளிட்ட பல்வேறு பால் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் கூட இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்றவாறு இந்த "ஹலால் சான்றிதழ்" நடைமுறையை பின்பற்றுகின்றன.

ஆனால் திமுக ஆட்சியில் தான் இந்துக்களுக்கு எதிராக இந்த ஹலால் நடைமுறையை ஆவின் செயல்படுத்துவதாக தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வருவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலாகும். ஏனெனில் அது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும், தற்போது பரப்பப்பட்டு வரும் புகைப்படம் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற ஆவின் சமையல் வெண்ணெய் புகைப்படம் என்பதும் நிதர்சனமான உண்மை. அதையே ஆவின் நிர்வாகம் தரப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 2020ல் கூட தமிழகத்தில் இதே போன்று ஆவின் பால் பொருட்கள் ஹலால் செய்யப்பட்டு இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசின் ஆவின் செயல்படுவதாக வதந்திகளை பரப்பிய அதே தேசவிரோத, சமூக விரோத சக்திகள் மீண்டும் அப்படி ஒரு பரப்புரையை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் அதனை மீண்டும் கையில் எடுத்திருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை வைத்து மக்களின் மத உணர்வுகளோடும், நம்பிக்கைகளோடும் விளையாடுவது எவராக இருந்தாலும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசும் அவர்களை உடனடியாக இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

அத்துடன் மூடநம்பிக்கையை அகற்றுகிறோம் என்கிற பெயரில் குறிப்பிட்ட மத நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் மட்டுமே தொடர்ந்து கேலி பேசி இழிவுபடுத்துவது எவராக இருந்தாலும் அதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே அது போன்ற நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இனியாவது நிறுத்திக் கொண்டு தங்களை முழுமையாக மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

21ம் நூற்றாண்டில் உருவாகியுள்ள சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தாமல் இது போன்று தவறாக பயன்படுத்தி அமைதியாக இருக்கும் மக்கள் மத்தியில் அமைதியை சீர்குலைத்து, பிரிவினையை தூண்ட நடைபெறும் சதிவேலைகளை மக்கள் புரிந்து கொண்டு கண்ணால் காண்பதையெல்லாம் உண்மை என நம்பி தவறான தகவல்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிர்வதையோ அல்லது பதிவு செய்வதையோ முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” எனக் கூறினார்.