பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்..

 
mk stalin

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.  

தமிழகத்தில் விவசாயத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்  பொங்கல் திருநாள்  கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் தைப்பொங்கல் பண்டிகையை அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடுவர். அப்படி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டில் உள்ள அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக்கூடிய குடும்பங்கள் என 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கப்படும்.  இந்த பரிசுத் தொகுப்பொல் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதற்கான திட்ட செலவுக்காக ரூ.2,429 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பொங்கல்

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக் கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை சார்பில், பரிசு தொகுப்புகளை பெறுவதற்கான டோக்கன்கள் கடந்த 3ம் தேதியில் இருந்து வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல்  பொதுமக்களுக்கு வழங்கப்படும் கரும்பு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு,  தாமதமுமின்றி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் அருகே உள்ள போர் நினைவுசின்னம் எதிரே  அன்னை சத்யா நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்க  உள்ளார். அதேபோல், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உள்ள சர்தார் ஜன் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க இருக்கிறார். அத்துடன் இதே பகுதியில்  வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த 2 ரேஷன் கடைகளுக்கும், அமைச்சர் உதயநிதி தனது  தொகுதி நிதியில் இருந்து ரூ. 50 லட்சத்தை ஒதுக்கி புதியக் கட்டிடங்கள் கட்டிக்கொடுத்தார்.   

அந்த 2 புதிய ரேஷன் கடைகளையும் திறந்து வைத்து பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க இருக்கிறார்.  இதேபோல், மாவட்டம்தோறும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்கள்  அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.