பொங்கல் பண்டிகை: தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை..

 
ரயில்

பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் வழியே தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என  பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வேலை சூழல் காரணமாக  சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். இதற்காக பொங்கல் பண்டிகையையொட்டிய நாட்களில் முக்கிய நகரங்களில் இருந்து இயங்கும் முன்பதிவு செய்யும் ரயில்கள் , பேருந்துகள் என அனைத்தும் நிரம்பி விட்டன. குறிப்பாக சென்னையில் இருந்து சேலம், கோவை மார்க்கத்தில் செல்லும் ரயில்களும், திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் ரயில்களும் முழுவதும் நிரம்பி விட்டன.

பொங்கல்

இதனால், பொங்கல் பண்டிகைக்காக  சேலம் மார்க்கமாக தென் மாவட்டங்களுக்கு  சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று  பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரத்தில் தாம்பரம் - நாகர்கோவில் மற்றும்  சென்னை -  சேலம் வழியே எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அந்த  ரயில்களும் தற்போது நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது.  ஹைதராபாத், விசாகப்பட்டணம், பெங்களூரு உள்ளிட்ட  நகரங்களில்  இருந்து ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியே தென் மாவட்ட பகுதிகளான திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு  சிறப்பு ரயில்கள் இயக்க அதிகளவிலான பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஆனால் தற்போது  இந்த மார்க்கத்தின் வழியாக பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகியவை மட்டுமே இயக்கப்படுகின்றன.  

ரயில்வே

இந்த ரயில்களில், பொங்கல் பண்டிகையையொட்டிய 12, 13, 14ம் தேதிகளில் முழுமையாக நிரம்பி, காத்திருப்போர் பட்டியலில் இருப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக  உள்ளது. அதனால், இம்மார்க்கத்தில் இதனால், கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் வலியுறுத்துகின்றனர்.  இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது, “பொங்கல் சிறப்பு ரயில்களாக 5 ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க பயணிகளின் கோரிக்கை வந்திருக்கிறது. அதனடிப்படையில் சென்னை மற்றும் கோவையில் இருந்து கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வாய்ப்புள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதனால், இன்னும் ஓரிருநாளில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது” என்றனர்.