பாஜகவினரின் தலையை எடுப்பேன், விரலை வெட்டுவேன் என பேசியவர் மீது நடவடிக்கை இல்லை- பொன்.ராதா

 
pon radha

நாகர்கோவில்  எஸ்எம்ஆர்வி மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள நியாய விலை கடையில் அனுமதியின்றி பிரதமர் மோடியின் படத்தை வைத்ததாக பாஜக கவுன்சிலர் சுனில் அரசு உட்பட 3 பேர் மீது வடசேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Image

நாகர்கோவில் வடசேரி எஸ்எம்ஆர்வி மேல்நிலைப் பள்ளி அருகில் ஊட்டுவாழ் மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலை கடை உள்ளது. இந்த கடையில் பாஜக கவுன்சிலர் சுனில் அரசு மற்றும் இரண்டு பேர் கடைக்குள் அனுமதி என்று புகுந்து கடையினுள் பிரதமர் மோடியின் படத்தை சுவரில் மாட்டி சென்றதாக நியாய விலைக் கடை ஊழியர் வேல்விழி நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பெயரில் வடசேரி காவல்துறையினர் பாஜக கவுன்சிலர் சுனில் அரசு உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மூத்த நிர்வாகி பொன் ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவினரின் தலையை எடுப்பேன் , விரலை வெட்டுவேன் என்று பொதுக்கூட்டத்தில் வன்முறைப் பேச்சை பேசியவர் குறித்து பாஜக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறை, நியாய விலைக் கடையில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க முயன்ற பாஜக கவுன்சிலர் சுனில்குமார் உள்ளிட்ட3 பேர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. காவல்துறையினரின்  ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.