அதிமுக அலுவலக கலவர வழக்கு - தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவு

 
admk

அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தாக்கல் செய்த வழக்கில் தமிழக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஜூலை 11ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறிய நிலையில், அதில் கத்திக்குத்து, கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக இருதரப்பினர் மீதும் அப்போது வழக்கப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 100 பேரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது. 

Madras Court

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி. பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. அன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்தார். அப்போது, அடியாட்களுடன் அலுவலகம் முன் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான தி.நகர் சத்யா, விருகை ரவி, ஆதி ராஜாராம் ஆகியோர் எங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். கத்தி, பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் எங்களை தாக்கினர். இது சம்பந்தமாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின், அலுவலகத்துக்குள் உள்ள முக்கிய ஆவணங்களை பாதுகாக்கவே, அவற்றை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்து வந்து அவரது வாகனத்தில் வைத்தனர். நடந்த உண்மை இவ்வாறு இருக்க, தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக அளித்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 19-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.