விக்னேஷ் கொலை வழக்கு - காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

 
vignesh

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் கொலை வழக்கில், சென்னை அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் தலைமை செயலக காலனி போலீசாரால் 18ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டு,  19ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார். காவலர்கள் அடித்துத் துன்புறுத்தியதில் விக்னேஷ் உயிரிழந்ததாக உறவினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டால், இந்த வழக்கை கடந்த மாதம் 24-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், நிஷ் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 13 இடங்களில் கொடுங்காயங்கள் இருப்பதற்கான தடயம் இருந்ததால்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தில் விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்வதாக அறிவித்தார்.

Police

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன் ராஜ், ஊர் காவல் படை காவலர் தீபக் ஆகிய 3 பேர் உட்பட தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கணபதி, எழுத்தர் முனாஃப், ஆயுதப்படை காவலர் கார்த்திக், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், பெண் காவலர் ஆனந்தி ஆகிய 9 போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் 4 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் அந்த அறிக்கையின் மூலம் சென்னை காவல் ஆணையருக்கு பரிந்துரை அளித்தார். 

Sankar jiwal

அதன்படி  சென்னை அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆணையர் சரவணன், காவல் ஆய்வாளர் செந்தில்குமாரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். விசாரணை கைதி கொலை வழக்கில் இதுவரை போலீசார் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.