கள்ளக்குறிச்சி வன்முறையில் விட்டுச்சென்ற 141 வாகனங்களை கைப்பற்றி போலீஸ் விசாரணை

கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தின் போது போராட்டக்காரர்கள் விட்டு செல்லப்பட்ட 141 இருச்சக்கர வாகனங்களை கைப்பற்றி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் +2ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து கடந்த 17ம் தேதி சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி முன்பு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைப்பெற்ற போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது.
இந்த கலவரத்தில் தனியார் பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த பள்ளி பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், பொருட்கள் அனைத்தும் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கியதோடு, தீ வைத்தும் கொளுத்தப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனங்களை போலீசார் விரட்டியடித்த போது அப்படியே விட்டு விட்டு தப்பியோடி விட்டனர். இதனால் தனியார் பள்ளி அமைந்துள்ள பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறச் சாலையோரங்களிலும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று கிடந்தது.
இப்படி கேட்பாரற்று சாலையோரங்களில் கிடந்த 141 இருச்சக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றி டாடா ஏஸ் வாகனங்களில் ஏற்றி சின்னசேலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதனிடையே கலவரத்தின் போது சாலையோரங்களில் விட்டு சென்ற இருச்சக்கர வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு அந்த வாகனத்தின் உரிமையாளரை கண்டறிந்து கலவரத்தில் அவர்களின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி கைது செய்யும் பணியில் தற்போது சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக 2 தனிப்படைகளை அமைக்கப்பட்டு சாலையோரங்களில் விட்டு சென்ற இருச்சக்கர வாகனங்களின் உரிமையாளர்களை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கலவரம் தொடர்பாக கைதாகி சிறையில் இருப்பவர்களின் இருசக்கர வாகனங்களும் இந்த இருசக்கர வாகனங்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் கலவரத்தின் போது சாலையோரங்களில் விட்டு செல்லப்பட்ட 141 இருச்சக்கர வாகனங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.