சிதம்பரம் அருகே பாஜக நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

 
கார்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் பாஜக ஒன்றிய தலைவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் காரின் பின்பக்க டயர் எரிந்து நாசமடைந்தது.

பெட்ரோல்

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை சலங்குகார தெருவைச் சேர்ந்தவர் தாமரை முருகன் (42). இவர் பாரதிய ஜனதா கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இன்று காலை இவர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ காரின் பின்பக்க டயர் வெடித்து தீயில் கருகி இருந்தது. பின்னர் காரை சுற்றி பார்த்தபோது கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து தாமரை முருகன் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பாஜகவின் ஒன்றிய தலைவர் தாமரை முருகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது யார்? எதற்காக வீசினார்கள் என்பது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பரங்கிப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது விதிமுறைகளை மீறியதாக இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது பாஜக ஒன்றிய தலைவர் தாமரை முருகன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.