பள்ளி வன்முறையின் போது களவாடப்பட்ட பொருட்கள் - இரவோடு இரவாக வீசிவிட்டு சென்ற கிராமவாசிகள்!!

 
tn

கள்ளக்குறிச்சி கலவரத்தை பயன்படுத்தி பள்ளி வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை பொதுமக்கள்  திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.

tn

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டது. அங்கிருந்து பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.  அத்துடன் பள்ளியில் இருந்த மாணவர்களின் ஆவணங்களும் தீக்கிரையாகின.  இந்த சூழலில் தனியார் பள்ளியில் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியில் இருந்து ஏராளமான பொருட்களை எடுத்துச் சென்றனர்.  ப்யூரிஃபையர் ,மெஷின் ,மேசைகள் ,நாற்காலிகள் ,சிலிண்டர் ,சமையல் பாத்திரம், ஃபேன், இரும்பு கிரில் கதவுகள் உள்ளிட்ட பொருட்களை போராட்டக்காரர்கள் திருடி சென்றனர்.

tn

இதையடுத்து பள்ளியில் சூறையாடப்பட்ட பொருட்களை பொதுமக்கள் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று தண்டோரா போட்டு காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  இந்த சூழலில் காவல்துறையின் வேண்டுகோளை ஏற்ற பொதுமக்கள் தாங்கள் எடுத்துச் சென்ற பொருட்களை சாலை ஓரங்களில் வீசிவிட்டு சென்றுள்ளனர் . இதில் மேசைகள்,நாற்காலிகள் , சமையல்  பாத்திரம் , சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் கனியாமூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.  பள்ளி வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்க தண்டோரா போட்டதைத் தொடர்ந்து இரவோடு இரவாக வந்து கிராமவாசிகள் இவற்றை வைத்துவிட்டு  சென்றுள்ளனர்.