சீமான் பேச்சால் ஆவேசமான மக்கள்- ஜாதி ரீதியாக பேசியதால் பரபரப்பு

 
seeman

செய்யாறு அருகே முதலாம் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த தினத்தை  முன்னிட்டு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமையில் நடைபெற்ற பெருவிழா நிகழ்ச்சியில் சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம இளைஞர்கள், வேன் மற்றும் கார் இரண்டு சக்கர வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி நாம் தமிழர் கட்சி கொடிக்கம்பங்களை சாய்த்தனர்.

உன்னை அடிக்கலை..


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் மறைந்த முதலாம் மாமன்னர் ராஜேந்திர சோழன் கோவில் உள்ளது. இக்கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது இந்நிலையில் மாமன்னர் ராஜேந்திர சோழரின் பிறந்த தினத்தை ஒட்டி அக்கிராமத்திலேயே அவரின் புகழை போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெருவிழா கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பங்கேற்று முதலாம் மாமன்னர் ராஜேந்திர சோழனின் வரலாற்றை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது மேடையின் அருகிலே சிலர் கூச்சலிட்டனர், இதனைக் கண்ட சீமான் மேடையிலேயே மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர்களை ஒருமையில் பேசினார். மேலும் தனது கட்சி கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில கட்சிகளைச் சார்ந்தவர்களை ஜாதி ரீதியாக விமர்சனம் செய்தார். இதனை பொருட்படாத அப்பகுதி இளைஞர்கள் நிகழ்ச்சிக்காக நடப்பட்டிருந்த கட்சியின் கொடிக்கம்பங்களை சாய்த்தனர். அதனைத் தொடர்ந்து அக்கட்சியினர் வந்த வேன் மற்றும் கார் இரண்டு சக்கர வாகனங்களை கற்களைக் கொண்டு நொறுக்கினர்.இதனைக் கண்ட சீமான் மேடையிலேயே தனது சட்டையை இழுத்து விட்டபடி நேருக்கு நேர் மோத முடியுமா? உங்களால் வருகின்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக போட்டி போட முடியுமா? என்று சவால் விட்டார். இந்தப் பகுதி உங்கள் கோட்டை என்றால் தமிழக முழுவதும் நாம் தமிழரின் கோட்டை இருப்பதாக வீர் கொண்டு பேசினார்.

சிலர் மேடையின் அருகிலேயே இருந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஏராளமான போலீசார் இருந்த நிலையில் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த  கூட்டத்தை கலைத்தனர். சீமான் பேசி முடிக்கும் தருவாயில் திடீரென கனமழை பெய்தது, இதனால் தனது பேச்சை முடித்துக் கொண்ட சீமான், பலத்த பாதுகாப்புடன் அவரது வாகனத்தில் ஏறி அப்பகுதியில் இருந்து சென்றார். மேலும் கனமழையைத் தொடர்ந்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து கலந்து சென்றனர்.