பரந்தூர் விமான நிலையம் அவசியம் - தமிழ்நாடு அரசு..

 
 பரந்தூர் விமான நிலையம் அவசியம் - தமிழ்நாடு அரசு..

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தினுடைய பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன்  டாலராக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்து, அதை நோக்கி மாநில அரசு தீவிரமாக  செயல்பட்டு வருகிறது.  இதில் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட வேண்டும் என்பதால்,  வளர்ச்சிக்கு உறுதுணையான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியதும், அதில் ஒன்றாக  மாநிலத் தலைநகரில் இரண்டாவது  விமான நிலையம் அமைக்க வேண்டியதும்  அவசியம் என்றும் கருதுகிறது. 24 ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் குறித்து பேசப்பட்ட போதிலும் தற்போது தான் அதற்கான அமைவிடம் உறுதிகியிருக்கிறது.   புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் விமான நிலையம் அமைய சாத்தியமான  இடங்களில் ஒன்றாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்

 பரந்தூரில் ரூ. 20,000  கோடி முதலீட்டில் 2028 ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்தில்  மக்கள் தொகை பெருக்கம்,  தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு விமான நிலையம் அமைக்கப்படுகிறது.  இந்த திட்டத்திற்கு ஆகக்கூடிய செலவுகள் செய்வதன் மூலமாக தமிழகத்திற்கு ,  100 ரூபாய்க்கு வருமானமாக 325 ரூபாய் கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.   புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.    இரண்டாவது விமான நிலையம் அமைப்பதன் அவசியம் குறித்து பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன .

 பரந்தூர் விமான நிலையம் அவசியம் - தமிழ்நாடு அரசு..

மீனம்பாக்கம்  முனையத்தில்  கடுமையான சரக்கு போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.  இதனால்  பெங்களூர் விமான நிலையத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன.  இது தமிழகத்தினுடைய வளர்ச்சியை தட்டிப் பறிப்பதாக அமைந்திருக்கிறது.  இதுவே  சென்னை  விமான நிலையம் பின்தங்கிய இருப்பதற்கு காரணமாகவும்,  புதிய விமான நிலையம் அமைப்பதற்கு காரணமாகவும் இருக்கிறது. இந்திய விமான நிலையங்களில் 6வது இடத்தில் சென்னை விமான நிலையம் இருக்கிறது.   ஒரு நாளைக்கு 400 விமானங்கள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.  2.2 கோடி பயணிகள் கையாளும் அளவிற்கு இந்த விமான நிலையம் இருக்கிறது.  

 பரந்தூர் விமான நிலையம் அவசியம் - தமிழ்நாடு அரசு..

புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலையத்தில்,  அதிக பயணிகள் பயணிக்க கூடிய வகையில்,  பெரிய அளவிலான ஜெட்   விமானங்களை தரையிறக்க முடியும்.   600 பயணிகள் பயணிக்க கூடிய பெரிய ரக விமானங்களை கையாள முடியும்.   பிற நாடுகளில் இருந்து சென்னைக்கு வர விரும்பும் பயணிகள் நேரடியாக சென்னையில் தரையிறங்க முடியும். பரந்தூர்  விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு பயணிக்க 73 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும் என்கிற கருத்தை புறந்தள்ள முடியாது.  இதற்காக ஒரு மெட்ரோ ரயில் தடம் விரிவு படுத்தப்படும்.  இதன் மூலம் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.