காதலிக்க மறுத்ததால் சத்யாவை கொலை செய்தேன்; 10 நாட்களாக திட்டம் தீட்டினேன்- சதீஷ் வாக்குமூலம்

 
parangimalai sathish

சென்னை பரங்கி மலையில் காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை கொலை செய்த விவகாரத்தில் கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சத்யாவின் தாய், உறவினர் ஒருவருக்கு  சத்யாவை திருமணம் முடித்து வைக்க முடிவு செய்ததால் தங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாகவும் சதீஷ் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவியை ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர்.. பரங்கிமலை  ரயில் நிலைத்தில் பரபரப்பு!


சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி சத்யா என்ற தனியார் கல்லூரி மாணவி சதீஷ் என்ற வாலிபரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவி சத்யா கொல்லப்பட்ட நிலையில் மகள் இறந்த சோகத்தில் கடந்த 14 ஆம் தேதி சத்யாவின் தந்தை மாணிக்கமும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தமிழக டிஜிபி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

காதலிக்க மறுத்ததால் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் சதீஷ் வாக்குமூலம் அளித்திருந்தார். இருப்பினும் கொலையை எவ்வாறு திட்டம் தீட்டி செயல்படுத்தினார் என்பது குறித்து விரிவான விசாரணை செய்வதற்காக சிபிசிஐடி போலீசார் நேற்று சதீஷை ஒரு நாள் காவலில்  எடுத்து விசாரித்தனர். விசாரணை செய்ததில் சத்யாவும் தானும் இரண்டு வருடம் காதலித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தங்களது காதலுக்கு சத்யாவின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், உறவினர் ஒருவரை சத்யாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சத்யாவை தன்னுடன் பேசக்கூடாது என தாய் கூறியதால், சத்யா தன்னிடம் பேசாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பலமுறை பேச முயற்சித்தும் சத்யா பேசாமல் தன் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்து பத்து நாட்கள் பின் தொடர்ந்து சென்று கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். கொலை நடந்த நாட்களுக்கு முன்னதாக மூன்று நாட்கள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்வதற்கு பின் தொடர்ந்து திட்டம் தீட்டியதாகவும் சத்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டினாலும் காதலித்த பெண் என்ற காரணத்தினால் கொலை செய்ய மனம் வராமல் தினமும் திரும்பிச் சென்றதாக தெரிவித்துள்ளார். கொலை செய்த தினத்தன்று தன்னையும் அறியாமல் குழப்ப மனநிலையில் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும், உண்மையில் கொலை செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என சி பி சி ஐ டி போலீசாரிடம் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். குறிப்பாக பின்னால் மறைந்து நின்று திடீரென சென்று சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட சிபிசிஐடி போலீசார் சதீஷை நவம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடக்க உத்தரவு பெற்று புழல் சிறையில் அடைத்தனர்.