ஜாமீன் கோரி பப்ஜி மதன் மனு - சென்னை சைபர் கிரைம் பிரிவு போலிசார் பதிலளிக்க உத்தரவு

 
pubg madhan

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஜாமீன் கோரி பப்ஜி மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், 10 நாட்களில் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலிசார் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல்,ஆபாசமாக பேசுதல்,  தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குண்டர் சட்டத்தை ரத்து செய்தனர். 

high court

இந்நிலையில், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நேற்று முன் தினம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பப்ஜி மதன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 10 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், 10 நாட்களில் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலிசார் பதிலளிக்க உத்தரவிட்டார்.