தருமபுரியில் மின்சாரம் தாக்கி மூவர் பலி - அன்புமணி ராமதாஸ் இரங்கல்

 
anbumani

தருமபுரி சந்தைப்பேட்டையில், வீட்டில் இருந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் போது மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தருமபுரி சந்தைப்பேட்டையில், வீட்டில் இருந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் போது மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.சந்தைப்பேட்டையில் வாடகை வீட்டில் குடியிருந்த இலியாஸ் என்பவர், வீட்டை காலி செய்வதற்காக அந்த வீட்டில் இருந்த பொருட்களை மாடியிலிருந்து கீழே இறக்கிக் கொண்டிருந்தார். அவருடன் இணைந்து வீட்டின் உரிமையாளர் பச்சையப்பன், கோபி ஆகியோர் இரும்பு பீரோவை கயிற்றில் கட்டி, மேலிருந்து இறக்கும் போது வீட்டை ஒட்டிச் சென்ற. உயரழுத்த மின்சார கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.இலியாஸ், பச்சையப்பன், கோபி ஆகியோரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.