ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதே எங்களால் தான் - அதிமுகவுக்கு பாமக பதிலடி

 
admk vs pmk

அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக உயிர் கொடுத்தது எனவும், பாமக மீது விமர்சனங்கள் வைக்கும் போது ஜெயக்குமார் சற்று கவனமாக வைக்க வேண்டும் எனவும் பாமக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார். 

சென்னை ராயபுரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக 4 பிரிவுகளாக உள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறியது கண்டனத்திற்குரியது எனவும், அன்புமணி ராமதாஸ் ஏறி வந்த ஏணியை மறக்கலாமா? அன்புமணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கீகாரம் கொடுத்ததே அதிமுக தான் என கூறினார். அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயலை அன்புமணி செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும், அதிமுக செய்ததை அன்புமணி நினைத்து பார்கணும் எனவும் பாமக நன்றி மறந்த கட்சி எனவும் கடுமையாம விமர்சித்தார். 

PMK Balu

இந்நிலையில், ஜெயக்குமாரின் கருத்துக்கு பாமக வழக்கறிஞர் பாலு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்து குழந்தைகளுக்கு கூட தெரியும். ஆனால், ஜெயக்குமார் இதற்காகவே தன்னை தயாரித்து வந்தது போல், 1988ல் நாங்கள் தான் பாமகவுக்கு இடம்கொடுத்தோம் என்றும், அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினரானதற்கு நாங்கள் தான் காரணம் என்றும் சொல்லியிருக்கிறார்.  கூட்டணி உடன்படிக்கையின்படியே  நாடாளுமன்றத்திற்கான இடம் பாமகவுக்கு வழங்கப்பட்டது.  1996 ஐ ஜெயக்குமார் சற்று திரும்பிப்பார்க்கவேண்டும். 1996 தேர்தலில் அதிமுக பெற்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை, 4. பாமக தனித்து நின்று பெற்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4. அதிமுக பலவீனமடைந்தபோது, மறைந்த ஜெயலலிதா அவர்கள் எங்களிடம் கூட்டணி வைத்தபோது தான் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றனர். 

அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக உயிர் கொடுத்தது. அதேபோல, 2001 தேர்தலின் போது எங்களிடம் கூட்டணி வைப்பதற்காக ஜெயலலிதா அவர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்தார். நாங்கள் எப்போதும் எங்களால் தான் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தார். எங்களால் தான் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாண்டுகள் முதல் அமைச்சராக இருந்தார், ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததற்கு பாமக தான் காரணம் என்று நாங்கள் ஒருபோதும் சொன்னதில்லை. ஆகவே ஜெயக்குமார் பாமக மீது விமர்சனங்கள் வைக்கும் போது சற்று கவனமாக வைக்கவேண்டும். இவ்வாறு கூறினார்.