7 தமிழர் விடுதலை கோப்பில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் - ராமதாஸ்

 
Ramadass

ஆளுனர் மாளிகையின் மாண்பை காக்க, 7 தமிழர் விடுதலை கோப்பில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்த சட்ட தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக அரசு அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.  ஆனால் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அத்துடன் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தில் மத்திய  அரசு சார்பில் அவகாசம் கோரியது.   பேரறிவாளன் விடுதலையில் முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்புடையதல்ல என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது.

 Perarivalan

இந்நிலையில் பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே விடுவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. பேரறிவாளன் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஆளுநர் குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்த விஷயத்தில் போகாமல் நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது ?பேரறிவாளனை விடுவிப்பது மட்டுமே இந்த வழக்கை முடித்து வைக்க ஒரே தீர்வு என நினைக்கிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் செயல் என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விமர்சிக்கும் நிலையை தமிழ்நாடு ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்யக்கூடும், அது அவப்பெயரை தேடித்தரும். அந்த நிலையை தவிர்த்து ஆளுனர் மாளிகையின் மாண்பை காக்க, 7 தமிழர் விடுதலை கோப்பில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என கூறியுள்ளார்.