பாமக தலைவராக 25 ஆண்டுகள் நிறைவு - ஜி.கே.மணிக்கு 24-ஆம் தேதி பாராட்டு விழா!!

 
tn

பா.ம.க. தலைவர் பொறுப்பேற்று 25 ஆண்டு நிறைவடையும் நிலையில் ஜி.கே.மணிக்கு 24-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்  தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "பாட்டாளி மக்கள் கட்சி அதன் பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லை கடக்கவிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25-ஆண்டுகள் ஆவதையொட்டி, அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப்படவிருக்கிறது. அந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த மடலை நான் வரைகிறேன்.

pmk

பாட்டாளி மக்கள் கட்சியில் ஜி.கே. மணிக்கு என தனி வரலாறு உண்டு. பொதுவாழ்க்கையில் நான்  எப்போது அடியெடுத்து வைத்தேனோ, அப்போதிலிருந்தே அவர் என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். 1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே ட்ரிபிள் எஸ் (SSS) என்றழைக்கப்பட்ட சமூக சேவை சங்கத்தில் எனக்கு அவர் அறிமுகம் ஆனார். அப்போதே அவரது துடிப்பான செயல்பாடுகள் என்னை ஈர்த்தன. அதன் பின்னர் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போதும் அவர் எனது வழியிலேயே பயணித்தார். பாட்டாளி மக்கள் கட்சியிலும் எனது கால் தடங்களையே அவரது பாதங்கள் பின்பற்றி வருகின்றன.

ஜி.கே.மணி அரசியலுக்கு வருவதற்கு முன் அடிப்படையில் ஓர் ஆசிரியர்; சமூக சேவகர். அவரது சொந்த ஊரில் சிலருடன் இணைந்து அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றை  நடத்தி வந்தார். 1980-ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்ட மணி, அதன்பின் முழுநேரமாக சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆசிரியர் பணியிலிருந்து விலகி விட்டார். அதன்பின்  வன்னியர் சங்கப் பணிகளுக்காக முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஜி.கே.மணி, எனது வழிகாட்டுதலில் சேலம், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வன்னியர் சங்கக் கொடிகளை ஏற்றி வைத்து, கலந்தாய்வு கூட்டங்களை நடத்தியும் தீவிரமாக களப்பணியாற்றினார்.

pmk

வன்னியர் சங்கத்தில் அவர் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில், 1984-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் ஜி.கே. மணிக்கு தியாகச் செம்மல் என்ற பட்டத்தை நான் வழங்கினேன். இந்த நிகழ்வில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரும் பங்கேற்று மணியை வாழ்த்தினார். பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்குவதற்கு முன்பாகவே நமக்கு கிடைத்த முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமையும் மணிக்கு உண்டு. தமிழ்நாட்டு வரலாற்றில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு 1986-ஆம் ஆண்டில் தான் நேரடித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு வன்னியர் சங்க பிரதிநிதியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலைஞர், எம்.ஜி.ஆரில் தொடங்கி இன்று மு.க.ஸ்டாலின் வரை கடந்த 50 ஆண்டுகளில் தமிழக முதலமைச்சராக இருந்த அனைத்து தலைவர்களுடனும் ஜி.கே. மணிக்கு அறிமுகம் உண்டு.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது, ஜி.கே.மணிக்கு வழங்கப்பட்ட முதல் பதவி தொண்டர் அணித் தலைவர் தான். அந்தப் பதவிக்கு பொருத்தமானவராக மணி செயல்பட்டார். 1996-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க.வின் வேட்பாளராக போட்டியிட்ட ஜி.கே.மணி அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றார். சங்கப் பணியாக இருந்தாலும், கட்சிப் பணியாக இருந்தாலும் இட்ட பணியை தட்டாமல் செய்பவர். 1998-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி திண்டிவனம் எம்.ஆர்.எஸ் திருமண அரங்கில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சிக்கான புதிய தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது பா.ம.கவின் அடுத்த தலைவர் யார்? என்று ஒட்டுமொத்த தமிழக அரசியல் உலகமும் எதிர்பார்த்தது. ஊடகங்களில் பலரின் பெயர்கள் யூகிக்கப்பட்டன. ஆனால், என் மனதில் இருந்தது ஒரே பெயர் தான். அந்த பெயர் தான் ஜி.கே.மணி. அவரைத் தான் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில்  பரிந்துரைத்தேன். அதைத் தொடர்ந்து அவரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொதுக்குழு நியமித்தது. அடுத்த 6 மாதங்களில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜி.கே.மணி தலைவராக தேர்வானார்.

pmk

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வரை உழைப்பாளியாக உழைத்த மணி, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓய்வறியா உழைப்பாளியாக மாறினார். பாட்டாளி மக்கள் கட்சிப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சங்கத்தையும், கட்சியையும் வளர்க்க நான் எவ்வாறு தமிழகம் முழுவதும் சுற்றி வந்தேனோ, அதேபோல் கட்சி அமைப்பு பணிக்காக  மணியும் தமிழ்நாடு முழுவதும் வலம் வந்திருக்கிறார். காலையில் தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், மாலையில் சென்னையில் இன்னொரு நிகழ்ச்சியில் பங்கேற்பார். இடையில் தைலாபுரத்தில் என்னை சந்தித்து காலையில் நடந்த நிகழ்ச்சிகள் குறித்து விளக்கிச் சென்றிருப்பார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25 ஆண்டுகளில் நடத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள், 30-க்கும் மேற்பட்ட மாநாடுகள், 300-க்கும் மேற்பட்ட உள்ளூர் மாநாடுகள், நூற்றுக்கணக்கான மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்திலும் மணியின் உழைப்பு அடங்கியிருக்கிறது. ‘‘யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே’’ என்பார்கள்... அதேபோல், கட்சி நிகழ்ச்சிகளில் ‘‘மருத்துவர் இராமதாஸ் வருவார் பின்னே.... ஜி.கே.மணியின் ஓசை வரும் முன்னே’’ என்று சொல்லும் அளவுக்கு நிகழ்விடத்திற்கு சென்று நிகழ்ச்சிக்கான பணிகளை முன்னின்று நடத்துவதில் ஜி.கே. மணி வல்லவர். அவரை நம்பி ஒரு பணியை ஒப்படைத்தால் அதை  அவர் செம்மையாக செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதை பாட்டாளியான நீயும் அறிவாய்.

gk mani

தலைமையிடம் பெயர் வாங்குவது மட்டும் தலைவர்க்கு அழகல்ல... தொண்டர்களாலும் போற்றப்பட வேண்டும். அதிலும் மணி சிறப்பானவர். கட்சியின் அடிமட்டத் தொண்டர் முதல் மாநில நிர்வாகிகள் வரை எவராவது ஒரு பிரச்சினை என்று அழைத்தால், அவர்களின் குறை என்ன? என்பதைக் கேட்டு கட்சிப் பிரச்சினையாக இருந்தால் எனது கவனத்திற்கும், அலுவல் சார்ந்த பிரச்சினையாக இருந்தால் அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு சென்று தீர்த்து வைப்பது அவரது வாடிக்கை. அதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை பாட்டாளிகளாகிய உங்களால் அவர் மதிக்கப்படுகிறார். கட்சிப் பணிகளை செய்து முடிப்பதில் ஜி.கே.மணி எனது தளபதி. உணர்வுகளை அறிந்து செயல்படுவதில் அவர் எனது மனசாட்சி. தொண்டர்களுக்கு ஒன்றென்றால், துடித்துக் கொண்டு போய் உதவுவார். அதனால் தான் 1998-ஆம் ஆண்டில் தொடங்கி இப்போது வரை தொடர்ந்து 12 முறை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 25-ஆவது ஆண்டாக இந்தப் பதவியை அவர் வகித்து வருகிறார். பா.ம.க. தலைவர் பதவியில் ஜி.கே.மணியின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அவருக்கு வரும் 24.05.2022 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் ( பொதிகை தொலைக்காட்சி) உள்ள அண்ணா அரங்கத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படவிருக்கிறது.

எனது தலைமையில் நடைபெறவுள்ள இந்த பாராட்டு விழாவில் மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சரும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ்,  பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு பாட்டாளியும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும்; தலைவர் ஜி.கே.மணியை பாராட்ட வேண்டும். அதற்காக நானே நேரில் அழைப்பதாக நினைத்துக் கொண்டு மே 24-ஆம் தேதி  சென்னையில் கூடுவதற்கு இப்போதிலிருந்தே தயாராகுங்கள் எனதுயிர் பாட்டாளி சொந்தங்களே...! " என்று குறிப்பிட்டுள்ளார்.