ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையுமே தனியாக சந்திக்க நேரம் ஒதுக்க விரும்பாத பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா என இரண்டு நாட்கள் பயன நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அகமதாபாத் புறப்பட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, பொன்முடி, தங்கம் தென்னரசு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் விமான நிலையம் வந்து பிரதமரை வழியனுப்பினர்.
இந்நிலையில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடியை ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. வியாழன் மாலை சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை இபிஎஸ் வரவேற்றார். ஆனால் தனியாக சந்திக்க அவருக்கு நேரம் ஒதுக்க வில்லை. பின்னர் இரவு ஆளுநர் மாளிகையில் பிரதமர் தங்கிய போதும், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து, மற்ற கட்சியினரை சந்திக்கவில்லை. பின்னர், இன்று அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு அகமதாபாத் திரும்புவதற்கு முன் பிரதமரை தனியாக சந்திக்க ஓபிஎஸ் முயன்றதாக கூறப்பட்டது. ஆனால், நேரம் ஒதுக்காததால் பிற கட்சியினரைப் போலவே ஓபிஎஸ் ம் விமான நிலையம் வந்து பிரதமரை பொதுவாக சந்தித்து வழியனுப்பினார்.
இந்நிலையில், ஓபிஎஸ் இபிஎஸ் இருவரையுமே பிரதமர் மோடி தனியாக சந்திக்க நேரம் ஒதுக்க விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இரண்டு தரப்பும் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதமரை வழியனுப்பிய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பிரதமரை வழியனுப்ப சந்தித்த போது தன்னுடைய உடல்நலம் குறித்து விசாரித்ததாக கூறினார் . மேலும், உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணை மற்றும் இபிஎஸ் உடன் சமரசமாக வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமமே மீண்டும் வெல்லும் என தெரிவித்தார்