உலகின் பழமையான தமிழ் மொழியால் இந்தியா பெருமை கொள்கிறது - பிரதமர் மோடி பேச்சு

 
modi

காசியை போன்று தமிழகமும் மகத்தான பழமையும், பெருமையும் வாய்ந்தது எனவும் தமிழ் மொழியை வளர்க்கவும், பாராட்டவும் வேண்டும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான பழமையான கலாச்சார தொடர்பினை மீண்டும் புதுப்பிக்கவும், கொண்டாடவும் காசி தமிழ்ச் சங்கம் விழா உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் ஒளிபரப்பு ஆகிய அமைச்சகங்களும் உத்தரப்பிரதேச அரசும் இணைந்து செய்துள்ளன.   இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது .ஒரு மாதம் நடைபெறவிருக்கும் இந்த விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ஒரு மாத நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இசையமைப்பாளர் இளையராஜா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர். மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மிகவாதிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் உட்பட பல்வேறு பிரிவினர் பங்கேற்றனர்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் திருக்குறல் இந்தி மொழிப்பெயர்ப்பு புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். 


விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழர்களை வரவேற்கிறேன். கலாச்சார பெருமை வாய்ந்தது தமிழ்நாடு. காசியை போன்று தமிழகமும் மகத்தான பழமையும், பெருமையும் வாய்ந்தது. பல வேற்றுமைகளை கொண்டுள்ள சிறப்பான நாடான இந்தியாவை கொண்டாடவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்ட பந்தம் உள்ளது. காசியில் காசி பட்டு சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் காஞ்சி பட்டு சிறந்து விளங்குகிறது. வேற்றுமையில் சங்கமம் என்பதற்கு காசி தமிழ் சங்கமமே சாட்சி. காசியும், தமிழகமும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறது. தமிழ் மொழியை வளர்க்கவும், பாராட்டவும் வேண்டும். உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் தாயகம் இந்தியா. இதைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் மற்றும் மொழியை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட வேண்டும். உலகின் மிகப் பழமையான இந்த மொழியைப் பற்றி நாம் உலகுக்குச் சொல்லும்போது முழு நாடும் பெருமை கொள்கிறது.