காமராஜர் பிறந்தநாள் - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 120ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் பெருந்தலைவர் காமராசர். காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து 1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். இதனைத் தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளர் , விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், விருதுநகர் நகர்மன்றத் தலைவர், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கினார். அத்துடன் 1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வுபெற்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அனைவரும் கல்விகற்க வேண்டும் என்று எண்ணி இலவச மதிய உணவுத்திட்டம், இலவச கல்வி, கட்டாயக்கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியதுடன், பல்வேறு பள்ளிக்கூடங்களை நிறுவினார். இதன் காரணமாகவே கல்விகண்திறந்த கர்மவீரர் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். இதேபோல் தமிழ்நாட்டில் விவாசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அணைகளையும் கட்டியுள்ளார். அவர் கட்டியுள்ள அணைகள் இன்றளவும் திறம்பட செயல்பட்டு வருகிறது.இதனிடையே காமராஜரின் 120வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்.
— Narendra Modi (@narendramodi) July 15, 2022
இந்நிலையில், கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.