எம்.பி.சி உள்ஒதுக்கீடு - திமுக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது!!

 
pmk

எம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர பி.சி ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்  அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டவாறு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள்ள சமூகங்களின் உள் இடஒதுக்கீட்டு கோரிக்கை குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நாட்டும் நோக்கம் கொண்ட  இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடந்த நவம்பர் 17-ஆம் தேதி ஆணை பிறப்பித்திருந்தது. அந்த ஆணையத்திற்கு மொத்தம் 6 ஆய்வு வரம்புகளை தமிழ்நாடு அரசு நிர்ணயம்  செய்திருந்தது. இப்போது கூடுதலாக ஓர் ஆய்வு வரம்பை சேர்த்து அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.

PMK
‘‘ உச்சநீதிமன்றம் கடந்த 31.03.2022-ஆம் நாள் சி.ஏ. 2600/2022 என்ற எண் கொண்ட வழக்கில் அளித்த தீர்ப்புரையின் 68 மற்றும் 73 பத்திகளில் தெரிவித்திருக்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள் ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று ஆணையில் கூறப்பட்டுள்ளது.

pmk

தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதியை நிலை நிறுத்த, உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் வழிகாட்டியவாறு தேவையான தரவுகளை சேகரித்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பல முறை கடிதங்கள் வாயிலாகவும், அறிக்கைகள் மூலமாகவும் கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

PMK

சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள்ள சமூகங்களின் உள் இடஒதுக்கீட்டு கோரிக்கை குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் பரிந்துரை அளிக்கும்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணையிட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறித்த காலத்திற்குள் ஆணையத்தின் பரிந்துரையைப் பெற்று  எம்.பி.சி மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.