“சின்னக் கலைவாணர் விவேக் சாலை” பெயர் பலகை திறப்பு!!

 
tn

மறைந்த நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலையில் “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” பெயர் பலகை திறக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் கே.பாலச்சந்தரின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் அறிமுகமானார் நடிகர் விவேக். இதையடுத்து புது புது அர்த்தங்கள், மின்னலே பெண்ணின் ,மனதை தொட்டு , நம்ம வீட்டு கல்யாணம்,  தூள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார். குறிப்பாக புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற வசனம் மிகவும் பிரபலமானது.  பிலிம்பேர் விருதுகள், தமிழக அரசு விருது,  பத்மஸ்ரீ விருது உள்ளிட்டவற்றை வென்ற நடிகர் விவேக் லஞ்சம், மக்கள்தொகை பெருக்கம் ,ஊழல்கள் ,மூடநம்பிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக பேசிய கருத்துக்களால்  சின்னச் கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்பட்டார். இந்த சூழலில் நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

tn
இந்த சூழலில் மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக அவரது இல்லம் அருகே உள்ள சாலைக்கு அவரின் பெயர் வைக்க, விவேக்கின் மனைவி முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து, விவேக் மனைவியின் கோரிக்கையை ஏற்று அவர் வாழ்ந்த பகுதிக்கு அவரது பெயரை வைக்க அனுமதி அளித்து அரசாணை  வெளியிடப்பட்டது. 

tn
இந்நிலையில் நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலையை "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பெயர் பலகையை  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, விவேக் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.