நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்- ஓபிஎஸ் அதிரடி

 
ops

பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்து வெள்ளிக் கவசத்தை தேவருக்கு வழங்கிய பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

ராமநாதபுரம் கமுதி அருகே உள்ள பசும்பொன் தேவர் நினைவிடத்தில் 115 ஆவது குருபூஜை மற்றும் 60 வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வரும் ஓ.பன்னீர்செல்வம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் நடைபாதையாக வந்து பங்கேற்றார்.  தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் தேவரின் நினைவு இல்லத்தில் தேவர் நினைவிட அறக்கட்டளை பொறுப்பாளர் தங்கமீனாளிடம் தேவருக்கு சாற்றுவதற்காக 10.5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசத்தினை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “ஒருங்கிணைப்பாளர் நான் தான் அதன் அடிப்படையிலேயே இன்று 10.5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசத்தை அறக்கட்டளையின் பொறுப்பாளரிடம் வழங்கி முக்கிய நாட்களுக்கு சாற்றி கொள்ளுமாறு கூறியுள்ளேன். கடந்த 2017 மற்றும் இந்த ஆண்டு தவிர்க்க முடியாத காரணத்தால் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து பெற இயலவில்லை. தேவருக்கு தங்க கவசம் சாற்ற வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அல்லது நினைவிட பொறுப்பாளரிடம் தங்கக் கவசத்தை வழங்க கோரி வங்கியிடம் 25 நாட்களுக்கு முன்பே நான் கடிதம் அளித்தேன். எடப்பாடி தரப்பினர்தான் நீதிமன்றத்திற்கு சென்றனர். நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்து மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக தங்கமீனாள் பெற்று தங்க கவசம் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சாற்றப்பட்டது. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம்” என்றார்.