காங்கிரஸை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும் - ஜெயக்குமார்

 
jayakumar

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் காங்கிரஸை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

election

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில்,  அதை ஏற்றுக் கொள்வதாக ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.  கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜ்,  காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேராவை எதிர்த்து போட்டியிட்டார்.  இதில் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார்.  சமீபத்தில் திருமகன் ஈவேரா எம்எல்ஏ மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில்,  ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.  இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்ட நிலையில் ஜி.கே. வாசன் அதிமுக  போட்டியிடும் முடிவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

jayakumar

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக களம் காண்பது தான் சிறந்த தீர்வு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம். மக்கள் நலன்,  தமிழ்நாட்டின் நலன் என்ற அடிப்படையில் ஜி.கே. வாசனின் முடிவு வரவேற்கத்தக்கது. ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும்.  இரட்டை இலை சின்னம்  விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.  நிச்சயம் இரட்டை இலையில் தான் போட்டி.  இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது" என்றார்.