கேரள மாணவி மரணத்தால் தமிழக ஷவர்மா கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

சவர்மா சாப்பிட்டதால் கேரள மாணவி உயிரிழந்ததை அடுத்து அம்மாநிலத்தில் உள்ள சவர்மா கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். கேரள மாணவியின் மரணத்தில் எதிரொலியாக தமிழகத்திலும் சவர்மா கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலத்தில் செருவத்தூர் பகுதியில் உள்ள பாஸ்ட் புட் உணவகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சவர்மா வாங்கி சாப்பிட்டு இருக்கிறார்கள். இவர்களில் 15 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது . வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அந்த 15 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் தான் அவர்கள் சாப்பிட்ட சவர்மா தான் புட் பாய்சன் ஆக மாறி இருப்பது தெரியவந்திருக்கிறது. சிகிச்சை பெற்று வந்தபோது மாணவ-மாணவிகளில் ஒரு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
11ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி சவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்த விவகாரம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் கேரள மாநிலத்தில் சவர்மா கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
கேரள சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் அதிகாரிகள் சவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா தனது குழுவினருடன் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் 13 சவரன் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா 2,000 அபராதம் விதித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் இந்த திடீர் ஆய்வு காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.