குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம்.. ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது கோர்ட்..

 
madurai high court

தமிழ்நாட்டில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்கக்கூடாது  என்றும், அவ்வாறு ஆபாசமாக நடனமாடினால் புகாரளிக்க தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலும் கோயில் நிகழ்ச்சிகளின்போது ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. அவ்வாறு நடத்தப்படும் நிகழ்சிகளில் ஆபாச நடனங்கள் ஆடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் சில கோயில்  திருவிழாக்களின்போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், இணையதளத்தில் குறவன் குறத்தி என தேடும்போது ஆபாச நடனங்கள் வருவதாக குற்றம் சாட்டியிருந்த மனுதாரர்,  இணையத்தில் உலவும் குறவன் குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  தமிழ்நாட்டில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்தார். மேலும், குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாடினால்  அதுகுறித்து புகாரளிக்க தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டார். மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் குறவன் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.